நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் பிணமாக கிடந்த பயிற்சி மாணவர் - தீவிர விசாரணையில் போலீசார்!
Seithipunal Tamil January 07, 2025 09:48 AM

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் பயிற்சி மாணவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூரைச் சேர்ந்த சந்தானகோபாலன் (வயது 23), நாமக்கல் உள்ள தனியார் பார்மசி கல்லூரி மாணவரான இவர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், சம்பவம் நடந்த இன்று காலை, மருத்துவமனை பெண்கள் பிரிவில் உள்ள கழிவறைக்கு சென்ற சந்தானகோபாலன் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என்று சொல்லப்படுகிறது. 

இதனால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, அவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் காணப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது உறுதியாகியது.  

நல்லிபாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், அதிக அளவில் வலி நிவாரணி மருந்தை ஊசி மூலம் செலுத்தியதாலேயே மரணம் ஏற்பட்டது தெரியவந்தது. 

மேலும், போதைக்காக மருந்தை பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.