Idli kadai: கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். ஒரு பக்கம் நடிப்பு, ஒரு பக்கம் இயக்கம் என கலக்கி வருகிறார். மற்ற நடிகர்களை போல் இடைவெளி விடாமல் ஒரு படம் முடிந்தவுடனேயே அடுத்த படம் என வேகமாக ஓடி வருகிறார். சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
ஏற்கனவே ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கியிருந்தார். அதன்பின் சில வருடங்கள் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார். அதன்பின் தனது சகோதரி மகனை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை துவங்கினார். இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ராயன் ஹிட்: இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த பாடலை தனுஷ் எழுதி அவரும், ஜிவி பிரகாஷும் பாடியிருந்தனர். இந்த படத்தை 80 சதவீதம் முடித்துவிட்டு ராயன் படத்தை இயக்கப்போனார் தனுஷ்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, இயக்குனராகவும் தனுஷ் வெற்றி பெற்றார். ஒருபக்கம், தெலுங்கில் உருவாகி வரும் குபேரா படத்திலும் நடித்தார். இந்த படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இட்லி கடை: அதேபோல், இட்லி கடை என்கிற படத்தையும் தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் சமீபத்தில் வெளியானது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின் இட்லி கடை படத்திலும் நித்யா மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஓவர்சீஸ் என சொல்லப்படும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை 12 கோடியே 60 லட்சத்திற்கு விலை போயிருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் கேப்டன் மில்லர் படத்தின் ஓவர் சீஸ் விலை 7 கோடிக்கும், ராயன் படம் 8 கோடிக்கும் மட்டுமே விலை போனது. ராயன் படம் வெளிநாடுகளில் 25 கோடிகளை வசூல் செய்திருப்பதுதான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே 50 கோடி சம்பளம் கேட்கும் தனுஷ் தனது சம்பளத்தை மேலும் உயர்த்தவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இட்லி கடை திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது. அதேநாளில் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீஸாகவுள்ளது.