சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
Webdunia Tamil January 09, 2025 12:48 AM


கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவில் கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அங்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலைவனப் பகுதி என்று கூறப்படும் சவுதி அரேபியாவில் மிகவும் அரிதாகவே மழை பெய்யும் என்ற நிலையில் கடந்த சில நாட்களாக அந்நாட்டில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மெக்கா, மதினா, உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

சராசரியாக சவுதி அரேபியாவில் வருடத்திற்கு வெறும் 10 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்ற நிலையில், இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட ஐந்து சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும், எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் முக்கிய பகுதியான மெக்கா பகுதியும் கனமழையால் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.