கலிஃபோர்னியா காட்டுத்தீ 5 பேர் பலி! ஆயிரம் கட்டிடங்கள் நாசம்!!
A1TamilNews January 09, 2025 02:48 PM

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல் மாநகரப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளது. பலத்த காற்று வீசியதால் தீ கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

செவ்வாய் கிழமை காலை 10:30 மணிக்கு பாலிசேட் பகுதியில் ஏற்பட்ட தீ பரவி 15 ஆயிரத்து 800 ஏக்கர் நிலப்பரப்பை பாழ்படுத்தியுள்ளது. இரண்டாவதாக ஈட்டன் பகுதியில் செவ்வாய் இரவு ஏற்பட்ட தீயில் 5 பேர் பலியாகியுள்ளனர்.10 ஆயிரத்து 600 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கு இரையாகியுள்ளது. ஹர்ஸ்ட் பகுதியில் செவ்வாய் இரவும், உட்லி பகுதியிலும் லிடியா பகுதியிலும் புதன்கிழமை காலை காட்டுத் தீ பிடித்துள்ளது. இந்த ஐந்து இடங்களிலும் தீப்பற்றி எரிவதால் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.

மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடைபட்டுள்ளன. தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு படையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.