இஸ்ரோ திடீர் முடிவு... 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் நடவடிக்கை மீண்டும் ஒத்திவைப்பு!
Dinamaalai January 10, 2025 12:48 AM

இஸ்ரோ விண்வெளியில் 2 செயற்கை கோள்களை ஒன்றிணைக்கும் பணியை  மீண்டும் ஒத்திவைத்துள்ளது. இஸ்ரோவின் கனவு திட்டமான ஸ்பேடெக்ஸ் திட்டத்தில், 2 செயற்கை கோள்களையும்  இன்று காலை 8 மணிக்கு இணைக்க இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது.  இதற்காக 2 செயற்கை கோள்களையும் நெருக்கமாக கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.  

நேற்று இரவு 8 மணிக்கு 2 செயற்கை கோள்களுக்கு இடையேயான இடைவெளி தூரம் 500 மீட்டரிலிருந்து 250 மீட்டர் வரை அருகில் வந்தது. இந்நிலையில் 2 செயற்கை கோள்களை ஒன்றிணைக்கும் டாக்கிங் நடவடிக்கையை இஸ்ரோ மீண்டும் ஒத்திவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  விண்வெளியில் எதிர்பார்த்ததை காட்டிலும்  தெளிவான சூழல் இல்லை என்பதால் செயற்கைகோள் இணைப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் 2 செயற்கை கோள்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.  2024 டிசம்பர் 30ம் தேதி பி.எஸ்.எல்.வி C 60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட 2 செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து 475 கி.மீ சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட 2 செயற்கைகோள்களை இணைக்கும் பணி 7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்கைகோள் இணைப்பு பணி 9 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 வது முறையாக  ஒத்தி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.