பொங்கலையொட்டி ஜனவரி 10 ஆம் தேதி தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் 'கேம் சேஞ்சர்' படம் வெளியாகிறது.
தெலுங்கில் வெகுநாட்கள் கழித்து ராம் சரணுக்கு படம் வெளியாவதால் அங்கே எக்கச்சக்க பரபரப்பு கூடியிருக்கிறது. இந்தப் படத்தை ரொம்பவும் சந்தோஷமாக கொண்டாட சிரஞ்சீவி ரசிகர்களும், ராம்சரண் ரசிகர்களும் சேர்ந்து தயாராகி இருக்கிறார்கள். எம்.ஜி என்ற முறைப்படி தமிழ் திரையில் வெளியிடும் உரிமையை வாங்கப் போட்டி இருந்ததில் கடைசியாக ராக்போர்ட் நிறுவனம் பெற்றுவிட்டது.
‘கேம் சேஞ்சர்' படத்தில்...அதில் இருக்கிற நிறைய சம்பவங்கள் ஆந்திரா தெலங்கானாவில் இப்போது நடைபெற்ற சம்பவங்கள் போல இயல்பாக அமைந்து விட்டதாம். அதனால் அந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு தெலுங்கில் எதிர்பார்ப்பு கூடி வருகிறது. பொதுவாக ஷங்கர் படங்களில் சாதாரண மனிதர் திடீரென முதல்வரானால் என்னவாகும் அதன் சுவாரசியங்கள் என்னென்ன என்று அதையே எல்லாரும் உட்கார்ந்து பார்த்து ரசிக்கிற மாதிரி செய்தார். இது மாதிரி ஒரு விஷயம் நடந்தால் அது என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும், அது எப்படி இருக்கும் என்பதைக் கொண்டு வருவது தான் ஷங்கரின் பாணி.
ஆந்திராவிற்கு இது சரி. தமிழுக்கு இது எந்த விதத்தில் மாறும் என்பதற்கு பதிலாக ஷங்கர் தமிழில் சில மாற்றங்களைச் செய்திருப்பதாக செய்திகள் வருகிறது. தமிழ்நாட்டு அரசியலுக்கேற்ப அந்த மாற்றங்கள் இருக்கிறதாம். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது பற்றி நேரடியாக வெளிப்படையாக வைத்து விடாமல் அந்த விஷயங்கள் தொனிக்கும்படி காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.
கேம் சேஞ்சர்அது தமிழில் பெரிய வரவேற்பைக் கொடுக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். இன்னும் படம் வெளியாக சில நாட்களே இருப்பதால் நாம் பொறுத்திருந்து எப்படி அமைந்திருக்கிறது என்று பார்க்கலாம்.