கசிந்த வேலூர் DIG குறிப்பாணை; விஷம் குடித்த காவலர் - நடந்தது என்ன?
Vikatan January 08, 2025 04:48 AM
வேலூர் எஸ்.பி அலுவலகத்தில், நீதிமன்ற வழக்குகளைக் கண்காணிக்கக்கூடிய போலீஸ் பிரிவு (கோர்ட் மானிட்டரிங் செல்) இயங்கி வருகிறது.

இந்தக் கண்காணிப்புப் பிரிவில் காவலர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். இதில், தலைமைப் பெண் காவலர் ஒருவர் நீண்ட காலமாக கோர்ட் விஜிலென்ஸில் பணிபுரிந்துவந்தார். அதன்பிறகு, வேலூர் வடக்குக் காவல் நிலையத்தில் க்ரைம் பிரிவுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் அந்தப் பெண் காவலர். அப்போதும்கூட ஓ.டி-யாக எஸ்.பி அலுவலகத்தில் இயங்கக்கூடிய கோர்ட் மானிட்டரிங் பிரிவிலேயே தொடர்ந்து வேலைச் செய்துவந்தார் அந்தப் பெண் காவலர். அதே பிரிவில் முதல்நிலை ஆண் காவலர் ஒருவரும் பணி செய்துவருகிறார். வேலூர் தெற்குக் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்குப் பிரிவில் இந்த ஆண் காவலர் பணி செய்கிறார். ஆனாலும், இவரும் ஓ.டி-யாக கோர்ட் மானிட்டரிங் பிரிவையே கண்காணித்து வந்தார். இவரின் மனைவியும் எஸ்.பி அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராக வேலைச் செய்துவருகிறார்.

வேலூர் சரக டி.ஐ.ஜி தேவராணி

இந்த நிலையில், பெண் தலைமைக் காவலருடன் முதல்நிலை ஆண் காவலரான தனது கணவர் திருமணத்தை மீறிய உறவுமுறையில் பழகி வருவதாக அமைச்சுப் பணியில் பணிபுரியும் அவரின் மனைவி, வேலூர் சரக டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகாரளித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனடிப்படையில், வேலூர் சரக டி.ஐ.ஜி தேவராணி கடந்த 30-12-2024 அன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பொன்னூர் காவல் நிலையத்துக்கு ஆண் காவலரையும், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள காவலூர் காவல் நிலையத்துக்குப் பெண் காவலரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவுப் பிறப்பித்தார்.

மேலும், 2 காவலர்களையும் பணியிட மாற்றம் செய்த அதே நாளில் அவர்கள்மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அதனை ஒரு வாரக் காலத்திற்குள் தெரியப்படுத்தவும் வேலூர் எஸ்.பி மதிவாணனுக்கும் உத்தரவிட்டார் டி.ஐ.ஜி தேவராணி.

எஸ்.பி-க்கு அனுப்பிய நிர்வாக ரீதியான குறிப்பாணை திடீரென வெளியே கசியவிடப்பட்டதால்தான் இப்போது விவகாரமே வெடித்திருக்கிறது. அந்தக் குறிப்பாணையில் ஆண் காவலர் மற்றும் பெண் காவலரின் பெயர்களைக் குறிப்பிட்டு `ஒழுக்கமற்ற நடத்தை காரணமாக துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோருதல்’ என டி.ஐ.ஜி பதிவிட்டுள்ள வார்த்தைகள் அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கிறது.

அதில், ``முதல்நிலை ஆண் காவலரும், தலைமைப் பெண் காவலரும் கடந்த ஓராண்டு காலமாக தகாத உறவுமுறையில் இருந்து வருவதாகவும், அவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிய வருகிறது. எனவே, மேற்கூறிய காவல் ஆளினர்கள் மீது விதி 3(ஆ)ன் படி துறைரீதியான `ஒழுங்கு நடவடிக்கை’ மேற்கொள்ளுமாறு வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். மேலும், இது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கையின் விவரத்தை ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்குமாறும் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்’’ எனக் குறிப்பிட்டு, டி.ஜி.ஜி தேவராணி கையொப்பமிட்டிருக்கிறார்.

குறிப்பாணை

``பொதுவாக அரசுத்துறை மற்றும் பொதுத்துறைகளில் பணி செய்யக்கூடியவர்களை இடமாற்றம் செய்யும்போது `நிர்வாக ரீதியாக இடமாற்றம் செய்யப்படுகிறது’’ என்றுதான் ஆணையில் குறிப்பிடுவார்கள். ஆனால், தகாத உறவு வைத்துக்கொண்டதாகவும், பொது இடத்தில் சுற்றித்திரிகிறார்கள் என்ற காரணத்தையும் குறிப்பிட மாட்டார்கள். `சட்டத்துக்குப் புறம்பான உறவு’ என்ற வார்த்தையைக் கூட டி.ஐ.ஜி பதிவு செய்திருக்கலாம். இந்தக் குறிப்பாணை பொதுவெளியில் கசிந்தது, ஆண் காவலருக்கும், பெண் காவலருக்கும் அதிகப்படியான மன உளைச்சலையும், அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வேலூர் மாவட்டக் காவல்துறையினர் பலரும் கொதித்தெழுந்து கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதனிடையே, குறிப்பாணையில் தொடர்புடைய ஆண் காவலர் அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இப்போது அவர் வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால், இந்த விவகாரம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.