ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றியடைய செய்தார். அடுத்த போட்டிகளில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருந்தார். ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.
இதனால் பும்ரா கேப்டனாக வேண்டும் என்று முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதாவது “பிசிசிஐ பும்ராவுக்கு கேப்டன் பதவி வழங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டும்.
தனது உடல் வலிமையை பேணி காப்பதிலும் விக்கெட்டுகள் எடுப்பதிலும் பும்ராவின் முழு கவனம் இருக்க வேண்டும். இதனிடையே அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பை வழங்கினால் அது பும்ராவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
கேப்டனாக அணியை வெற்றி பெற வைக்க அவர் கூடுதல் உழைப்பை போட வேண்டியது இருக்கும். இதனால் அவருக்கு காயம் ஏற்படலாம், பும்ராவின் இத்தகைய கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு கூட வரலாம். எனவே தங்க முட்டையிடும் வாத்தை கொன்று விடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.