திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்காக திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி, இலவச தரிசன டோக்கன் விநியோகம் நேற்று செய்யப்பட்டது.
இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா உள்பட 06 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் திருப்பதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை திருப்பதி வருகிறார் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
குறித்த, துயர சம்பவம் தொடர்ப்பாக,பிரதமர் அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் ஏற்பட்ட கூட்டநெரிசலால் வேதனை அடைந்தேன். எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது என பதிவிட்டுள்ளார்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழா.மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும்.
அதன்படி, ஜனவரி 10 முதல் 19ஆம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனால் இவ்வழியாகச்சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.