நடிகை ஹனி ரோஸ் புகாரின் அடிப்படையில் பிரபல கேரள தொழிலதிபர் பாபி செம்மனூரை போலீசார்ர் நேற்று கைது செய்தனர். நடிகை ஹனி ரோஸ் பாலியல் துன்புறுத்தல் புகாரைத் தொடர்ந்து தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டதாக கொச்சி டிஜிபி அஸ்வதி ஜிகி தெரிவித்தார். போலீசார் பாபி செம்மனூரைக் கைது செய்து எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எர்ணாகுளம் முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிபதி முன் பதிவு செய்யப்பட்ட நடிகை ஹனி ரோஸின் ரகசிய வாக்குமூலம், தற்போதுள்ள வழக்கில் செம்மனூர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டுமா என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மனூரிடம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது.
நடிகை ஹனி ரோஸ் இதற்கு முன்பு செம்மனூர் மீது வெளிப்படையான பாலியல் துன்புறுத்தல், அவதூறு மற்றும் பிற தகாத நடத்தைகளைக் கூறி விரிவான புகார் அளித்திருந்தார். செம்மனூருக்குச் சொந்தமான கண்ணூர், ஆலக்கோடு நகைக்கடை திறப்பு விழா மற்றும் தனக்கு எதிராக அவதூறான மற்றும் பாலியல் துன்புறுத்தல் கருத்துகள் வெளியிடப்பட்ட பிற நிகழ்வுகள் தொடர்பான சம்பவங்களை நடிகை ஹனி ரோஸ் முன்னிலைப்படுத்தி இருந்தார்.
பொதுவெளி மற்றும் சமூக டிஜிட்டல் தளங்களில் செய்யப்பட்ட கருத்துகள் மற்றும் குறிப்புகள் உட்பட டிஜிட்டல் ஆதாரங்களையும் நடிகை ஹனி ரோஸ் சமர்ப்பித்திருந்தார்.கூடுதலாக தனது பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தியதாகக் கூறப்படும் சுமார் 20 யூடியூப் சேனல்கள் மீதும் நடிகை ஹனி ரோஸ் புகார்களை அளித்தார். அவரது விரிவான புகாரை அடுத்து, ஹனி ரோஸ் நேற்று மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அறிக்கையின் பிரத்தியேகங்கள் வெளியிடப்படாத நிலையில், மேலும் குற்றச்சாட்டுகளைத் தீர்மானிக்க காவல்துறைக்கு இது அடிப்படையாக இருக்கும்.
தற்போது தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது ஐபிசி பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்கள்) மற்றும் மின்னணு வடிவத்தில் ஆபாசமான விஷயங்களைப் பரப்புவது என ஐடி சட்டத்தின் பிரிவு 67ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழில், முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை ஹனி ரோஸ், இது குறித்து கூறுகையில், “தொழிலதிபர் ஒருவரின் வணிக நிறுவனத் திறப்பு மற்றும் சில நிகழ்ச்சி களுக்கு மற்ற நடிகைகளைப் போல நானும் சென்றுள்ளேன். பொது நிகழ்ச்சியில் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இரட்டை அர்த்தத்தில் அவர் பேசியதை ஏற்க முடியவில்லை. அதன் பின்னர் அவர் நிறுவன நிகழ்ச்சிகளுக்குச் செல்ல மறுத்து விட்டேன்.
ஆனால் தொடர்ந்து எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார். வசதியானவர் என்பதற்காக எந்த பெண்ணையும் அவமதிக்க முடியுமா?உங்கள் செல்வத்தின் பலத்தை நீங்கள் நம்புகையில் நான் சட்டத்தை நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.