பிரதமர் மோடியின் முதல் podcast:``நான் கடவுள் அல்ல... நானும் இந்தி கிடையாது..."- வைரல் கிளிப்ஸ்!
Vikatan January 10, 2025 10:48 PM

ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் பாட்காஸ்டின் வழியே தொடர்ந்து உரையாடிவருகிறார். அவருடைய நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி கலந்துகொள்ளும் 'பீப்பிள் வித் தி பிரைம் மினிஸ்டர்' பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதியாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதில், நிகில் காமத்தின் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்திருக்கிறார். அதில் வெளியான ஒரு பகுதியில், நிகில் காமத், 'எனக்கு இந்தி சரளமாகப் பேசத் தெரியாது. என் இந்தியில் குறை இருந்தால் மன்னியுங்கள்' எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி

அதற்கு சிரித்துக்கொண்டே பேசிய பிரதமர், `` 'மைன் பி ஹிந்தி பாஷி நஹின் ஹூன்' நானும் இந்தி மொழிப் பேசுபவன் கிடையாது... நமக்கு தெரிந்த இந்தியை வைத்து இப்படியே நிகழ்ச்சியைக் கொண்டு சென்றுவிடுவோம்" என்றார். இதற்கு முன்பு நிகில் காமத் பாட்காஸ்டில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.அஷ்வின், 'இந்தி நாட்டின் தேசிய மொழி அல்ல, அது ஒரு அலுவல் மொழி மட்டுமே' எனப் பேசியது வைரலானது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நான் பாட்காஸ்டில் பங்கேற்பது இதுவே முதல் முறை... இந்த நிகழ்ச்சி எப்படி செல்லும் என்பதே தெரியாது" எனச் சிரித்துக்கொண்டார்.

மற்றொரு பகுதியில், உலக நாடுகளுக்கு மத்தியில் நடந்து வரும் போர் குறித்துப் பேசும்போது, `` இந்தியா நடுநிலையான நாடல்ல எனப் பலமுறை கூறியுள்ளோம். நான் அதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன் - நான் அமைதியின் பக்கம் இருக்கிறேன்" என்றார்.

பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்தபோது ஆற்றிய உரையைப் பற்றி நினைவு கூர்ந்து பேசிய அவர், "நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ஒரு உரை நிகழ்த்தினேன். மக்கள் தவறு செய்கிறார்கள் என்று நான் பகிரங்கமாகக் கூறினேன். நானும் தவறு செய்கிறேன். தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே... கடவுள் அல்லவே" என்றார்.

நிகில் காமத் - பிரதமர் மோடி

2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தனியார் செய்தி சேனலுக்கு பிரதமர் மோடி கொடுத்த பேட்டியில், ``என் அம்மா உயிருடன் இருந்தபோது, நான் உயிரியல் ரீதியாகப் பிறந்தேன் என்றுதான் நம்பினேன். அவர் இறந்த பிறகு, என் வாழ்வின் எல்லா அனுபவங்களையும் சிந்தித்துப் பார்த்தபோதுதான், கடவுள்தான் என்னைத் தேர்வு செய்து அனுப்பியிருக்கிறார் என்பதை உறுதியாக நம்பினேன். இந்த ஆற்றல் என்னுடைய உயிரியல் உடலிலிருந்து வந்திருக்க முடியாது. அது கடவுளால் எனக்கு வழங்கப்பட்டது... என்னுடைய எல்லா காரியத்திலும் கடவுள் என்னை வழிநடத்துகிறார்" எனப் பேசியது வைரலான நிலையில், அவரின் 'நானும் மனிதன்தான்' கருத்து வைரலாகியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, முதல் பதவி காலத்துக்கும் இரண்டாம் பதவி காலத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்திருக்கும் பிரதமர் மோடி, ``என் முதல் பதவி காலத்தில், மக்கள் என்னைப் புரிந்துகொள்ள முயன்றனர். நான் டெல்லியைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். அரசியலுக்கு வரும் மக்கள் ஒரு குறிக்கோளுடன் வர வேண்டுமேதவிர லட்சியத்துடன் வரக்கூடாது. நல்லவர்கள் தொடர்ந்து அரசியலுக்கு வர வேண்டும்." என்றார். இதுவரை ஆறு புரோமோ மாதிரியான வீடியோக்கள் வெளியாகி வைரலாகியிருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.