17 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காணாமல் போன இவரைக் கொலை செய்ததாக இவரது உறவினர் மற்றும் மூன்று சகோதரர்கள் என 4 பேர் தண்டனை அனுபவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றம்சாட்டப்பட்ட உறவினர் இன்று உயிருடன் இல்லை. 3 சகோதரர்களும் ஜாமீன் பெற்றுள்ளனர்.
பீகார் காவல்துறை தரவுகளில் இறந்தவராக குறிப்பிடப்படும் நபரை ஜான்சி காவல்துறையினர் கண்டுபிடித்ததால் மர்மமான இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஜனவரி 6ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஜான்சி காவல்துறையினர், சந்தேகத்துக்குரிய ஒரு நபரை விசாரித்ததில், 6 மாதகாலமாகத்தான் அவர் அந்த பகுதியில் வசிப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் பீகாரின் தேவரியா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் 50 வயதாகும் அவரின் பெயர் நதுனி பால் என்பதையும் தெரிந்துகொண்டுள்ளனர்.
police patrollingதனியாக வசித்து வந்த அவர், "நான் குழந்தையாக இருந்தபோதே என் பெற்றோர் இறந்துவிட்டனர். என் மனைவியும் எப்போதோ என்னைவிட்டு சென்றுவிட்டார். நான் பீகாரில் எனது வீட்டுக்குச் சென்று 16 ஆண்டுகள் ஆகிறது" எனக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு பால் அவரது வீட்டிலிருந்து காணாமல் போயிருக்கிறார். இதுதொடர்பாக பாலின் தாய்வழி உறவினர், பாலின் உறவினர் மற்றும் நான்கு சகோதரர்கள் மீது புகார் அளித்துள்ளார். அவர்கள் பாலின் நிலத்தை அபகரித்துக்கொண்டு அவரைக் கொலை செய்ததாக அந்த புகாரில் குற்றம்சாட்டியிருக்கிறார்.
பாலின் இளைய சகோதரர் காவல்துறையில் பணியாற்றுகிறார். துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் முறையிட்டு அவரது பெயர் முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மற்றவர்கள் எட்டு மாதம் வரை சிறையில் இருந்து, பின்னர் ஜாமீனில் வெளிவந்திருக்கின்றனர்.
நதுனி பால் உயிருடன் இருப்பதை அறிந்துகொண்டபிறகு அவரது சகோதரர்களில் சதேந்திர பால், "ஒருவழியாக கொலை பழியில் இருந்து விடுதலை பெற்றுவிட்டோம்" என மகிழ்ந்துள்ளார்.
நதுனி பால் பீகார் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.