கடந்த சில மாதங்களாக டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சோதனை நடத்தி, வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்று கண்டறிந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், டெல்லியில் உள்ள 23 பள்ளிகளுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டன.
பள்ளி வளாகத்தில் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய வெடிகுண்டு இருப்பதாகவும், தேர்வு நேரம் என்பதால் அனைத்து மாணவர்களும் வகுப்பறைகளுக்குள் இருப்பார்கள்; மற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் பள்ளியைச் சுற்றி இருப்பார்கள் என்பதால் இழப்பு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில், பள்ளிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டதில், மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல் ஒரு புரளி என்பது தெரியவந்தது.
மின்னஞ்சல் அனுப்பிய நபருக்கு தேர்வு அட்டவணை மற்றும் பள்ளிகளில் உள்ள பிற நடவடிக்கைகள் குறித்து தெரியும் என்பது காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், அந்த மின்னஞ்சலைப் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.