கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி அலுவலக கண்காணிப்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடந்தையாக இருந்த தாயார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக டிஜிபி அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வருபவர் பாக்யராஜ். அதே அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. அந்த பெண் ஊழியர் கணவருடன் விவாகரத்தாகி 2 மகள்களுடன் வசித்து வந்தார். பழக்கத்தை வைத்து பாக்யராஜ் அந்த பெண் ஊழியரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெண் ஊழியரின் வீட்டிற்கு வந்த பாக்யராஜ், அவர்களது மகள்களுக்கு பிரியாணி கொடுத்துள்ளார். பிறகு அங்கு இருந்த அந்த பெண் ஊழியரின் 21 வயது மகளிடம் (கல்லூரி மாணவி) பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த அவர் பாக்யராஜ் கன்னத்தில் அடித்து வெளியே விரட்டி விட்டதாக தெரிகிறது.
இது குறித்து தாயாரிடம் மகள் நடந்ததை தெரிவித்துள்ளார். ஆனால் தாயாரோ பாக்யராஜிடம் அஜஸ்ட்டு செய்து கொள் என்று கூறியதாக தெரிகிறது. ச்தன் பிறகு கல்லூரி மாணவி எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாக்யராஜ் மீதும், தனது தாயார் மீதும் புகார் அளித்தார். புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கல்லூரி மாணவி குறித்து பாக்ராஜ் அவதூறாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் கல்லூரி மாணவி போலீசாரிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று எழும்பூர் மகளிர் போலீசார் பாக்யராஜ், மற்றும் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல், பெண்ணை தாக்குதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.