Kamala Kamesh: தமிழ் சினிமாவில் நடிகையாக திகழ்ந்தவரும், சின்னத்திரையில் பிரபலமான உமா ரியாஸின் அம்மாவுமான கமலா காமேஷ் காலமானார். தமிழ் ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழில் ஜெயபாரதி இயக்கிய குடிசை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ச்சியாக 480க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை படங்களில் நடித்திருந்தாலும் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கோதாவரி கேரக்டர் ரொம்பவே பிரபலம்.
ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷங்க படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் நடித்து வந்தார். 1974ம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்துக்கொண்டார். 1984ம் ஆண்டு காமேஷ் தவறிவிட, மகள் உமா ரியாஸை தனியாளாக வளர்த்து இருக்கிறார்.
ஷூட்டிங் சமயத்தில் கமலா காமேஷுக்கு இடுப்பில் அடிப்பட்டதால், 1996ம் ஆண்டு ஆபிரேஷன் செய்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாம். அதற்கு பிறகும் வலி குறையாமல் இருக்க தொடர்ச்சியாக ஏழு முறை இடுப்பில் ஆபிரேஷன் செய்து இருக்கிறார்.
உமா ரியாஸ் தன்னை அம்மாவாக பார்த்துக்கொள்வதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் 70 வயதாகும் கமலா காமேஷ் இன்று காலமாகி இருக்கிறார். இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உமா ரியாஸின் கணவர் ரியாஸ் கானும் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் புகழ் பெற்ற நடிகர். தமிழில் வின்னர் படத்தில் கட்டத்துரை கேரக்டர் அவர் கேரியரில் முக்கிய இடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.