காஞ்சிபுரம் மாவட்டம் கலியனூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர். செங்கல்பட்டில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். செங்கல்பட்டில் ஒரு வீடு வாங்கி தனது சக ஊழியர்களுடன் தனியாக வசித்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் அது காதலாக மாறியது. இருவரும் சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் ஒன்றாக சுற்றித் திரிந்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் அந்தப் பெண் கர்ப்பமாகிவிட்டார். அந்த இளைஞன் பென்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காஞ்சிபுரத்தில் இருந்த பெண் திடீரென தனது அக்கா கணவரிடம் வயிற்று வலி இருப்பதாகக் கூறினார். இதையடுத்து, அந்தப் பெண் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதனால் அந்தப் பெண் மன உளைச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரது தாயாரும் மருத்துவமனைக்கு வந்து அவரைத் திட்டியுள்ளார். இதற்கிடையில், நேற்று இரவு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற பெண், கலியனூர் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் குழந்தையை வீசி கொன்றார்.
காலையில், அங்கு வந்த மருத்துவர்கள், தாயையும் குழந்தையையும் காணவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக காஞ்சிபுரம் போலீசாருக்கு இந்த விஷயம் குறித்து தகவல் அளித்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தாயே குழந்தையை எடுத்து சென்றது தெரியவந்தது. போலீசார் சென்று விசாரித்தபோது, தாய் காணாமல் போனது சந்தேகம் எழுந்தது, விசாரணையின் முடிவில், காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடித்தனர். குழந்தை எங்கே என்று அந்தப் பெண்ணிடம் கேட்டபோது, அவர் முரண்பட்ட தகவல்களைக் கூறினார். போலீசார் நடத்திய விசாரணையில், மன உளைச்சல் காரணமாக குழந்தையை கிணற்றில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக பெண்ணை கைது செய்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெண்ணின் காதலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரவு நேரத்தில் பச்சிளங் குழந்தையை தூக்கிச் சென்று கிணற்றில் வீசி தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.