பொங்கல் பண்டிகை காரணமாக அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 21,904 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என்று நான்கு நாட்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் நேற்று 3,537 சிறப்பு பேருந்துகளும், பிற முக்கிய நகரகங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,560 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த இடங்களுக்கு செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.