புதுச்சேரி மக்கள் ஷாக்..! 5 வயது சிறுமிக்கு ஹெச்எம்பிவி தொற்று உறுதி..!
Newstm Tamil January 12, 2025 11:48 AM

சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (ஹெச்எம்பிவி) என்று அழைக்கப்படும் குழந்தைகளை தாக்கக்கூடிய தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் இந்த வைரஸ் தொற்று முதல் முறையாக சிறுமி ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் சளி, காய்ச்சல் பாதிப்பால் சிறுமி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிறுமியின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஹெச்எம்பிவி வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் குழந்தை முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை தரப்பில் கூறியது: தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தை ஹெச்எம்பிவி பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது தெரியவந்தது. குழந்தை முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. ஜிப்மரில் உள்ள நிலையான நெறிமுறையின்படி அனைத்துக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. அங்கு போதுமான பரிசோதனைக் கருவிகள் உடனடியாகக் கிடைக்கும். கதிர்காமம் அரசு மருத்துவமனையிலும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகை வைரஸ் தொடர்பாக புதுச்சேரி அரசும் தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் பொதுமக்கள் அச்சமோ, பீதியடையவோ தேவையில்லை.

கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனையில் பெரியவர்களுக்கென 10 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டும், ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக 6 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டும் அமைக்கப்பட்டு விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த நோய் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.