என் மனைவியை பார்த்து கொண்டே இருப்பது பிடிக்கும்.. 90 மணி நேரம் வேலை குறித்து ஆனந்த் மகேந்திரா..
WEBDUNIA TAMIL January 12, 2025 04:48 PM


ஊழியர்கள் பணி நேரம் குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி மற்றும் எல்&டி நிறுவனத்தின் தலைவர் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில், இந்த இருவருக்கும் பதிலடி தரும் வகையில் மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறிய கருத்து தற்போது பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

"வீட்டில் இருந்து உங்கள் மனைவியை நீங்கள் எத்தனை மணி நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? அதற்கு பதிலாக அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை கூட அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்," என்று எல்&டி தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

வாரத்துக்கு 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறிய நிலையில், அதற்கு முன்பு இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி 70 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த இரு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில், மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா இதற்கு பதில் அளித்துள்ளார்.

"என் மனைவி மிகவும் அற்புதமானவர். அவரை பார்த்துக்கொண்டே இருப்பது எனக்கு பிடிக்கும். எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதை விட, செய்யும் வேலையில் தரம் எந்த அளவு இருக்கிறது என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். 90 மணி நேரம், 70 மணி நேரம் வேலை செய்வது முக்கியமில்லை. சில மணி நேரம் வேலை செய்தாலும் தரமாக வேலை செய்ய வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதில் தற்போது பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.



Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.