திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை உடல் நலக்குறைவால் இன்று காலமானது.
திருநெல்வேலி: நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலின் யானையான காந்திமதிக்கு வயது 56 ஆகிறது. பொதுவாக ஒரு யானையின் சராசரி ஆயுட்காலம் 60 - 70 வருடங்கள் மட்டும் தான். காந்திமதிக்கு இது வாழ்வின் கடைசி காலகட்டங்கள் (முதிய பருவம்) என்று சொல்லலாம்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நீண்ட நாட்களாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த காந்திமதி யானை, கடந்த மாதங்களில் நின்றபடியே உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
மூட்டு வலியால் நேற்று முதல் நிற்க முடியாமல் கீழே விழுந்த நிலையில், எழ முடியாமல் அவதிப்பட்டது. இதனையடுத்து கிரேன் உதவியுடன் நிற்கவைத்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் உடனடி சிகிச்சை வழங்கினர்.
ஆனால், இன்று அதிகாலை யானையின் உடல்நிலை மேலும் மோசமடைந்து உயிரிழந்துள்ளது. யானையின் மறைவு பக்தர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அதன் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.