ஏமன் நாட்டின் மத்திய மாகாணத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 67 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏமன் நாட்டின் பைடா மாகாணத்தின் ஜாஹர் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 15 பேர் உயிரிழந்ததாக ஹௌதி போராளிக் குழுவின் தலைமையிலான சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 67 பேர் படுகாயமடைந்த நிலையில், 40 பேர் நிலைமை மிகவும் கவலைகிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த விபத்தில் காணமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், விபத்து நிகழ்ந்தபோது பதிவு செய்யப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடன் அப்பகுதியில் தீ கொளுந்துவிட்டு எறிவதும், வானமெங்கும் கருநிற புகை சூழ்ந்திருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த மத்திய யேமன் மாகாணத்தை ஈரான் துணையுடைய ஹௌதி போராளி குழு கட்டுப்படுத்தி வருகின்றது. இந்த போராளி குழு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அந்நாட்டு அரசுடன் உள்நாட்டு போர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.