#featured_image %name%
சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 47
தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
நதிக் கரைகளில் வளரும் நாணலுக்கு ஒரு இயல்பு உண்டு. நதிப் பிரவாகத்தில் இந்தச் செடி முழுமையாக வளைந்து கொடுக்கும். வெள்ளம் குறைந்தவுடன் மீண்டும் மேலெழுந்து நிற்கும்.
பிரதிகூலமான சூழ்நிலையில் அமைதியாக இருந்து, அனுகூலமான சூழ்நிலையில் பொங்கி எழவேண்டும் என்று கூறும் நியாயம் இது. ‘வளையாவிடில் உடைந்து விடுவாய்’ என்ற கூற்று கூட உண்டு. ‘உடைந்தால் முருங்கை. வளைந்தால் நாணல்’ என்ற சொலவடை உள்ளது. சாணக்கிய நீதி சாஸ்த்திரத்தில் வரும் இந்த சுலோகம் இதே கருத்தைக் கூறுகிறது.
நமந்தி பலினோ வ்ருக்ஷா: நமந்தி குணினோ ஜனா:|
சுஷ்க காஷ்ட்ஸ்ச மூர்கஸ்ச பித்யதே ந து நம்யதே ||
பொருள் – பழங்கள் நிறைந்த மரம் வளைந்திருக்கும். குணங்கள் நிறைந்தவர் பணிவோடிருப்பார். நற்குணங்கள் அற்ற மூர்க்கர், பழங்கள் இல்லாத மரங்களைப் போல வணங்காதிருப்பார். அதனால் உடைந்து விடுவார்.
இயற்கையை ஆராய்ந்து மனித இனத்திற்குப் பயன்படும் சூத்திரங்களை அளித்த நியாயங்களில் இதுவும் ஒன்று.
தேவையைப் பொறுத்து அடங்கி இருக்கவேண்டும். ‘நான் எதற்கும் அடங்காதவன்’ என்ற வீம்பு வசனம் எல்லா நேரங்களிலும் வேலை செய்யாது என்று கூறும் நியாயம் இது. ‘தலை குனிய மாட்டேன்’ என்றால் வாசல் நிலை இடித்து தலைக்குக் கட்டுப் போட வேண்டி வரும். இந்த நியாயம் கூறும் நீதியை, கவி வேமனா இயற்றிய சதகத்தில் வரும் செய்யுளும் எடுத்துரைக்கிறது.
அனுவுகானி சோட்ட அதிகுலமனராது
கொஞ்செமுண்டுடெல்ல கொதுவ காது
கொண்ட அத்தமந்து கொஞ்சமை உண்டதா
விஸ்வதாபிராம வினுர வேமா |
பொருள் – நமக்குத் தகுந்ததல்லாத இடத்தில் நாம் சிறந்தவர் என்றும் உயர்ந்தவர் என்றும் கூறிக் கொள்வது நல்லதல்ல. நம் உயர்வைக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் நம் வாழ்க்கைக்கு எந்த குறைவும் ஏற்பட்டு விடாது. மலை எத்தனை பெரியதாக இருந்தாலும் கண்ணாடியில் பார்த்தால், சிறியதாகவே தென்படும் அல்லவா!
சிலரிடம் வினயம் இருக்காது. சிலரிடம் வினய குணம் இருந்தாலும் வினயத்தைக் காட்டுவதற்கு சங்கோஜம் கொள்வர். பணிவோடிருந்தால் தன்னை உபயோகமற்றவன் என்று எண்ணிவிடுவர்களோ, முட்டாளாக நினைத்து விடுவார்களோ என்று அஞ்சுவர். ஆனால் வினயம் என்பது ஒரு நல்ல குணம். எத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் பணிவு இருந்தால்தான் சிறப்பு.
ஸ்ரீகிருஷ்ணர் –
தேவையானபோது வீரத்தைக் காட்டி பொங்கி எழுந்த ஸ்ரீ கிருஷ்ணர், ‘ரணசோர்’ என்றும் பெயர் பெற்றார். போர்க்களத்திலிருந்து ஓடியவன் என்று இதற்குப் பொருள். சிலர் ‘ரணசோரன்’ என்று கூட பெயர் வைத்துக் கொள்வார்கள். வெற்றியை அடைவதில் தலைவனுக்கு இப்படிப்பட்ட வியூகம் தேவை. என்பது இந்த நியாயத்தின் உட்பொருள். லீலாமானுட வேடதாரியான ஸ்ரீ கிருஷ்ணருக்கும் காலயவனனுக்கும் இடையே நடந்த போரில் இது போன்ற சம்பவம் நடந்தது இது தெலங்காணாவில் உள்ள ‘ராக்கமசர்ல’ என்ற குகைகளில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
ஜராசந்தனின் நண்பனான அசுர அரசன் காலயவனன், தனக்கிருந்த வரத்தால் கர்வமடைந்து, துவாரகை மீது படைஎடுத்தான். அந்தப் போரில் இருந்து பயந்து ஓடி ஒளிவது போல ஸ்ரீ கிருஷ்ணர் நடித்தார். அது ஒரு போர் வியூகம். காலயவனன் துரத்தி வந்த போது, ஸ்ரீகிருஷ்ணர் தப்பித்துக் கொண்டு ‘ரணசோர்’ லீலையாக ஒரு குகைக்குள் நுழைந்தார். அங்கு கோசல அரசரான முசுகுந்த சக்ரவர்த்தி, ஆழ்ந்த உறக்கம் என்ற வரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவருடைய உறக்கத்தைக் கலைப்பவர் சாம்பலாகிப் போவார் என்பது அவருக்குக் கிடைத்த வரம். காலயவனன், முசுகுந்தரை ஸ்ரீகிருஷ்ணர் என்று நினைத்து உறக்கத்தைக் கலைத்து எரிந்து சாம்பலானான். காலயவணன் சாம்பலான இடம் தெலங்காணாவில் ஆனந்தகிரி மலையில் இருக்கும் ‘ராக்கமசர்ல’ குகைகளில் இருப்பதாக புராண வரலாறு. முசுகுந்தரின் பெயரால் தோன்றிய நதி ‘முசிகுந்தா நதி. அதுவே மூஸி நதியாக இன்று காணப்படுகிறது.
அடங்க வேண்டிய இடத்தில் அடங்குவது வெற்றிக்கான ஒரு மார்க்கம். சமயத்திற்கேற்ப நடந்து கொள்வது என்பது புத்திசாலித்தனம். சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையின் நடந்த ஒரு முக்கிய சம்பவம், எதிரியின் திட்டத்தை எப்படி தவிடு பொடியாக்கினார் என்பதைத் தெரிவிக்கிறது.
சத்திரபதி சிவாஜி, அப்ஜல்கானின் படையெடுப்புக்கு அஞ்சுவது போல் நடித்து, ஒரு வியூகம் வகுத்தார். சிறந்த வீரனான அப்ஜல்கானோடு தான் போரிடுவது நடக்காத செயல் என்றும், பீஜப்பூர் அரசாங்கம் தன்னை மன்னிக்கும்படி பார்த்துக் கொள்ளும்படியும் செய்தி அனுப்பினார். பெருந்தன்மையும் சிறப்பும் மிக்க அப்ஜல்கானுக்குத் தன்னிடமிருக்கும் அனைத்தையும் சமர்ப்பணம் செய்வவதற்குத் தயாராக இருப்பதாக நம்பிக்கை ஏற்படுத்தினார். தான் ஆக்கிரமித்த கோட்டைகளை எல்லாம் பீஜப்பூரிடம் ஒப்படைப்பதாகவும் தனக்கு வெறும் மன்னிப்பு மட்டும் அருளும்படியும் கூறி நம்பவைத்தார். அப்ஜல்கானின் துரோகத்தைத் தன் வியூகத்தால் முறியடித்தார். அதன் பிறகு நடந்த கதை அனைவரும் அறிந்ததே.
ஒரு புறம் நட்பாக இருந்தபடியே, மறு புறம் முதுகில் குத்தும் நரரூப ராட்சசன், ஹிந்துக்களைத் துன்புறுத்தி வதைத்த சதிகாரன் அப்ஜல்கானை, சிவாஜி சாதுர்யமாகக் கொன்றார்.
தேவையேற்பட்டபோது அடங்கி, காலம் அனுகூலமானபோது புலிநகம் தரித்த நரசிம்மராக மாறிய சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இந்த ‘வேதஸ’ நியாயத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
நாணலோடு தொடர்புடைய இந்த நியாயத்திற்கு மற்றொரு கோணம் உள்ளதென்று அறிஞர் கூறுவர்.
துர்ஜன: ப்ரியவாதீ ச நைதத்விஸ்வாஸகாரணம் |
மது திஷ்டதி ஜிஹ்வாக்ரே, ஹ்ருதயே து ஹலாஹலம்||
பொருள் – தீய மனிதன், மிகவும் இனிமையாகப் பேசுவான். ஆனாலும் அந்த சொற்களை நம்பக் கூடாது. நாவின் மீது தேன் இருக்கும். உள்ளத்தில் விஷம் இருக்கும். அதிக வினயம் காட்டுபவர்களை நம்பக் கூடாது என்றும், ஆஷாடபூதியிடம் கவனமாக இருக்கும்படியும் இது தெரிவிக்கிறது.
யாருக்கும் தலை குனியமாட்டேன் என்ற மன நிலை, தன்மானம் என்று தோன்றலாமே தவிர அது அனைத்து இடங்களிலும், எல்லோரிடமும், எல்லா நேரத்திலும் பயன்படும் சூத்திரம் அல்ல என்பர் ஆய்வாளர். ஞானிகளிடம் தலை வணங்க வேண்டும் என்கிறார் மனு. வேதச நியாயத்தின் மற்றொரு கோணம் இது.
அபிவாதன சீலஸ்ய நித்யம் வ்ருத்தோபசேவின:
சத்வாரி பரிவர்தந்தே ஆயுர்வித்யா யஸோபலம் ||
– (மனுஸ்ம்ருதி: 2- 121)
பொருள் – ஞானத்தில் பழுத்தவர்களை எப்போதும் வணங்கி, அவர்களுக்கு சேவை செய்து வருபவர்களின் ஆயுள், கல்வி, புகழ், வலிமை என்ற நான்கு குணங்களும் வளர்ச்சி அடையும்.
News First Appeared in