ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் எதிர்வரும் மார்ச் 23-இல் தொடங்குவதாக பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. இதனை, பி.சி.சி.ஐ., துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா கூறி உள்ளார். மும்பையில் பி.சி.சி.ஐ., சிறப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய மற்றும் வெளிநாட்டு அணிகளின் ஸ்டார் வீரர்கள், உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் என அணிகளில் சரிவிகித கலவையும், ஆரவாரமும் கலந்த ஒரு கிரிக்கெட் திருவிழா என்று சொல்லலாம் இந்த ஐ.பி.எல் போட்டிகளை. இது கிரிக்கெட் ரசிகர்களின் ஏகபோக விளையாட்டாக கருதப்படுகிறது.
இன்று நடந்த பி.சி.சி.ஐ., சிறப்பு பொதுக் கூட்டத்துக்கு பின்னர் ராஜிவ் சுக்லா நிருபர்களிடம் கூறியதாவது:
சிறப்பு பொதுக் கூட்டத்தில் பி.சி.சி.ஐ.,யின் புதிய பொருளாளராக பிரபதேஜ் சிங் பாட்டியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. இந்தியன் பிரிமியர் லீக் அல்லது உலக பிரிமியர் லீக் பற்றியோ எதுவும் பேசப்படவில்லை. தற்போதைய அறிவிப்பு என்னவென்றால் மார்ச் 23-ஆம் தேதி ஐ.பி.எல்., தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 25-ஆம் தேதி நடக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மாதத்தில் IPL அணிகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமிழ்நாடு CSK அணிக்கு அஸ்வின் திரும்பியதும், தோனி இந்த முறையும் அணியில் இடம்பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தந்திருக்கிறது.