இன்று ஜனவரி 13ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் உள்ளூர் பக்தர்களும் விழாவில் கலந்து கொள்ள வசதியாக இன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சி தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று திருச்சி மாவட்டத்திலும் இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பொதுமக்கள் கலந்து கொள்ள வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு மாவட்டங்களிலும் இன்று அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரதன்று சேந்தனார் வீட்டுக்கு சிவபெருமான் களி உண்ண சென்ற தினத்தை ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
சிவாலயங்களில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஜனவரி 13ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கும் நிலையில், கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று நாளை ஜனவரி 14ம் தேதி தைப் பொங்கல் விழா என்பதால், கடலூர் மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்திலும் பொங்கலுக்கு தொடர்ந்து 8 நாட்கள் விடுமுறை தினங்களாக வருகிறது.
இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமையன்று முழு வேலை நாளாக செயல்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.