விழுப்புரம்: பெஃஞ்சல் புயலால் வெளிவந்த 2000 ஆண்டுகள் பழமையான சங்க கால பொருள்கள்..!
Vikatan January 15, 2025 06:48 PM

வட தமிழகம் மாவட்டங்களான விழுப்புரம் பெஃஞ்சல் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பேரிடரால் இயற்கை வளங்களும் விலங்குகளும் எதிர்பார்க்க முடியாத அளவில் பாதிக்கப்பட்டது. விழுப்புரம் அருகே பம்பை ஆற்றின் வடகறையில் தென்னமாதேவி மற்றும் அய்யங்கோவில்பட்டு ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளது. பெஃஞ்சல் புயலால் ஏற்பட்ட மண் அரிப்பால் நிலத்தின் மேற்பரப்பில் சங்ககால வாழ்வியல் தொல்பொருள் எச்சங்கள் பல வெளிவந்தன. இவற்றை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இளங்கலை வரலாறு பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் சதீஷ்குமார் மற்றும் வீரவேல் ஆகியோர் கண்டறிந்தனர்.

புதிய கற்கால கருவி

இவற்றைப் பற்றிய தனது பேராசிரியர் ரமேஷிடம் கூறினார்கள். அவர்களை சோதித்து பார்த்த பின் அப்பகுதியின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொண்ட போது மேலும் பல எச்சங்களை கண்டறிந்தார்கள்.

இவை தொடர்பாக விளக்கம் அளித்த பேராசிரியர் ரமேஷ், "நாங்கள் மேல் பரப்பில் ஆய்வு மேற்கொண்டதில் புதிய கற்காலம் தொடங்கி சோழர்காலம் வரையிலான பல தொல்பொருள்கள் கிடைத்தன.

இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இவற்றில் புதிய கற்கால கருவியான நன்கு மெருகேற்றப்பட்ட உளி போன்ற அமைப்புடைய செல்ட் ஒன்றும், இருமுனை கொண்ட கற்கோடரி ஒன்றும், அறியவகை கல் மணிகளான பீப்பாய் வடிவ சூதுபவளம் மணிகள் (carnelian bead), பெத்தான் வடிவ மற்றும் துண்டிக்கப்பட்ட ஸ்படிகம் மணிகளும் (quartz bead), பல நிறங்கள் கொண்ட பல வடிவங்களில் கண்ணாடி மணிகள் மற்றும் அகேட் ( agate bead) போன்றவையும் இவற்றில் அடங்கும். சுடுமண்ணிலான பொருள்களில் பெண் கலை உருவம் (human fingurine) , நூல் நூற்கும் தக்களி (spindle whore), ஆட்டக்காய்கள் (gemesmen), மணிகள், முத்திரைகள் (seal), காதணிகள் மற்றும் வட்டசில்லுகள் (hopscotch), புலி மற்றும் இரட்டை மீன்களோடு உத்தமசோழன் என்று தேவநாகரி எழுத்து பொறிக்கப்பட்ட செப்புக்காசு போன்றவைகளும் கிடைத்துள்ளது. இத்துடன் 41 cm நீளம், 25 சென்டிமீட்டர் அகலம் ,7.05 சென்டிமீட்டர் கணம் கொண்ட செங்கற்களும் கிடைத்துள்ளது. இவை சங்க கால செங்கற்களுடன் ஒத்துப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

"ஆனைமேடு"

தென்னமாதேவியில் "ஆனைமேடு" என அழைக்கப்படும் சொல்லியல் மேட்டுப்பகுதியில் சங்ககாலத்துடன் தொடர்புடைய பொருள்கள் இருப்பதால், அவை ஒரு செழுமையான நாகரீகமான இடமாக கருதப்படுகிறது. இவை 500 மீட்டர் நீளம் முதல் 10 ஏக்கர் வரையிலான நிரப்பரப்பில் பரவியுள்ளது. இதேபோன்று பம்பை ஆற்றின் வடகறையில் அமைந்துள்ள அய்யங்கோவில் பட்டு என்னும் கிராமத்தில் அய்யனார் கோவில் முதல் பம்பை ஆற்றிருக்கும் இடைப்பட்ட பகுதியில் சற்று மேடான விவசாய நிலத்தில் தற்பொழுது ஏற்பட்ட வெள்ளத்தினால் சங்க கால பொருள்கள் பல வெளிவந்தன. குறிப்பாக அரிய வகை கற்களான கார்னிலியன் (carnelian), அகேட் (agate) போன்றவையும் பல வண்ணங்களிலும் பல வடிவங்களிலும் கிடைத்துள்ளது. அத்துடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களிகள், ஆட்டகாய்கள், காதணிகள், வட்ட சில்லுகள், கெண்டி மூக்குகள், பானை ஓடுகள், ரவுளட்ட ஓடுகள், ஆரஞ்சு நிற பானையோடுகள் போன்றவையும் கிடைத்துள்ளது. கூடுதலாக சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள் மற்றும் உரை கிணறு (ringwell), கிடைத்துள்ளது. இத்துடன் சோழர் கால நாணயமும் கிடைத்துள்ளது .

சோழர் கால சாஸ்தா அபிராமேஸ்வரர் கோவில்

இப்பகுதியில் அமைந்திருக்கும் சோழர் கால சாஸ்தா அபிராமேஸ்வரர் என்னும் அய்யனார் கோவிலில் முதலாம் ஆண்டு ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளில் இவ்வூரினை கயிறுர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் அய்யங்கோவில்பட்டு என்று மருவி அழைக்கப்படுகிறது. இக்கோவிலிற்கு அருகில் உள்ள கற்பலகையில் பல்லவர் காலத்தை சேர்ந்த மூத்த தேவி (ஜேஷ்டாதேவியின்) சிற்பமும் காணப்பட்டது.

இவற்றில் மகனான மாந்தை ஒரு புறமும் குள்ளமான உருவமமுடைய பணிப்பெண் மறுபுறமும் காணப்படுகிறது. இவ்வாறான பொருள்கள் பம்பை ஆற்றின் பழமையும் சங்ககால நாகரிச் சிறப்பையும் கூறுகிறது. தேவாரப் பாடல்களிலும் பம்பை நதியை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்டால் பம்பை ஆற்றின் நாகரிகத்தை முழுமையாக அறியலாம். எனவே இங்கு அகழாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்து தனது உரையை முடித்துக் கொண்டார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.