திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை அமைச்சர் மகேஷ் ஊர் மக்களிடம் வழங்கினார்.
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. அந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தார். அதே நேரத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வருகை தந்தார். இருவரும் ஒன்றாக அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளை வெற்றி பெற்றது. விஜயபாஸ்கரின் வெற்றி பெற்ற காளைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார்.
தொடர்ந்து சூரியூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை அமைச்சர் மகேஷ் ஜல்லிக்கட்டு விழா குழுவினரிடம் வழங்கினார். அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மகேஷ், “சூரியூரில் 3 கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக அது இருக்கும். இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான பணிகள் தொடங்கும்” என்றார்.