அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்... இஸ்ரேலை நடுங்க வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!
Seithipunal Tamil January 15, 2025 07:48 PM

இஸ்ரேலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.ஏமன் மீதான குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். 

 கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் ஹமாசுக்கு எதிராக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்துவருகிறது. இதில் ஹமாசுக்கு ஆதரவாக ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோபமடைந்த இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் இணைந்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து  பதிலடியாக வான் தாக்குதல் நடத்திவருகின்றனர்.இதையடுத்து  தலைநகர் சனாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

அப்போது இஸ்ரேலின் ஏவுகணை இடைமறிப்பு அமைப்பால் இதை தடுக்க முடியவில்லை என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.இதையடுத்து முன்னதாக மேலும் 2 முறை மத்திய இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதாக ஹவுதி அறிவித்தது. இஸ்ரேலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 12 மணி நேரத்தில் நடந்த 3-வது தாக்குதல் இதுவாகும். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.