இயற்கை விவசாயம் இப்போது படிப்படியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கி இருக்கிறது. மும்பையைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர் இயற்கை விவசாயம் சார்ந்த தொழிலில் சாதித்து வருகிறார். காவ்யா தோபாலே என்ற அப்பெண் செவிலியர் மும்பையில் பிரபலமான சயான் மாநகராட்சி மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் கொரோனா காலத்தில் செவிலியராக வேலை செய்து வந்தார். காவ்யாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சாவின் பிடியில் இருந்து உயிர் பிழைத்து வந்தார். ஆனால், இப்போது அவர் தனது கிராமத்தில் இப்போது மண்புழு உரம் தயாரித்து மருத்துவமனையில் கிடைத்த சம்பளத்தை விட அதிக அளவில் சம்பாதித்து வருகிறார்.
இது குறித்து காவ்யா கூறுகையில்,''2017ம் ஆண்டு செவிலியர் பிரிவில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு டாடா மருத்துவமனையில் சில ஆண்டுகள் வேலை செய்தேன். அதன் பிறகு 2019ம் ஆண்டு சயான் மாநகராட்சி மருத்துமனையில் வேலை கிடைத்தது.
கொரோனா காலத்தில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வந்தபோது அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்தபோது இரசாயான உரம் பயன்படுத்தப்பட்ட உணவால்தான் இது போன்ற பிரச்னை ஏற்படுகிறது என்று அறிந்து கொண்டேன். இதையடுத்து நோயை குணப்படுத்துவதை விட நோயிக்கான காரணத்தை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தவேண்டும் என்று முடிவுசெய்து விவசாயிகளிடம் செயற்கை உரம் இல்லாமல் விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த முடிவு செய்தேன். இதற்காக 2022ம் ஆண்டு எனது அரசு செவிலியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு புனே அருகில் உள்ள எனது மாமனார் ஊரான தகிலே வாடிக்கு சென்றேன். வேலையை ராஜினாமா செய்துவிட்டு அங்கு சென்றபோது எனது குடும்பத்திலேயே அதற்கு கடும் விமர்சனங்களை சந்தித்தேன். அதோடு மும்பையில் வளர்ந்த என்னால் எப்படி விவசாயத்தில் சாதிக்க முடியும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
எனது ஊரில் அதிகமான விவசாயிகளை சந்தித்து பேசியபோது அவர்கள் இரசாயான உரங்களை பயன்படுத்தும், நிலத்தில் மண்புழுக்கள் இல்லாமல் இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களிடம் மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்களை ஏன் பயன்படுத்தவில்லை என்று கேட்டதற்கு, மட்காத மாட்டுச்சாணத்தால் பெரிய அளவில் மகசூல் கிடைப்பதில்லை என்று சொன்னார்கள். அவர்கள் பயன்படுத்தும் இரசாயான உரங்களால் நிலத்தில் இருக்கும் நுண்ணுயிர்கள் அழித்து வந்தன. இதையடுத்து சொந்தமான மண் புழு உரம் தயாரித்து கொடுக்க முடிவு செய்து முதல் பெட் தயார் செய்தோம். அதனை தொடர்ந்து ரூ.5 லட்சம் செலவில் மேலும் 10 பெட்களை தயார் செய்தோம். அடுத்த 6 மாதத்தில் இதனை 20 பெட்டாக அதிகரித்தோம். மாட்டுச்சாணம் மண்புழு உரமாக மாற 60 நாள்கள் பிடிக்கும். இப்போது ஒவ்வொரு மாதமும் 20 டன் மண்புழு உரம் தயார் செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.
கணவருடன் காவ்யா50 கிலோ பேக் 500 ரூபாய்க்கு கொடுக்கிறோம். இதன் மூலம் வருடத்திற்கு 30 லட்சத்திற்கு வியாபாரம் நடைபெறுகிறது. இதில் செலவு போக 50 சதவீதம் லாபம் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தவேண்டும் என்பதற்காக மண்புழு உரம் தயாரிக்கும் முறையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தோம்.
மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3000 பேருக்கு இப்பயிற்சியை வழங்கி இருக்கிறோம். ஒரு நாள் பயிற்சிக்கு ரூ.1500 வசூலிக்கிறோம். அதன் பிறகும் தொடர்ந்து தேவைப்படும் உதவிகளை செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறோம். மண்புழு உரங்களுக்குத் தேவையான சாணத்திற்காக 200 மாடுகளை பராமரித்து வருகிறோம்''என்றார்.