பணமோசடி விசாரணைக்காக, வங்காளதேச முன்னாள் பிரதமரான ஹசீனாவின் மருமகளான துலிப் சித்திக் இங்கிலாந்து நாட்டின் மந்திரி பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி இங்கிலாந்தில் ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைச்சரவையில் லஞ்ச ஒழிப்பு துறை மந்திரியாக இருந்த துலிப் சித்திக் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இவர் வங்காளதேச முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவின் (வயது 77) மருமகள் சித்திக், வங்காளதேசத்தில் நடந்து வரும் நிதி மோசடி தொடர்பான விசாரணையில் சிக்கியுள்ள அவர் மீது விசாரணை நடைபெற்றுவருகிறது .இதனால், அவரிடம் விசாரணை நடைபெற உள்ளதால் இங்கிலாந்து பிரதமருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை முதல் தொடர்ந்து நடந்த மாணவர் போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததையடுத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, வங்காளதேசத்தில் இருந்து தப்பிய ஹசீனா, பின்னர் ஆகஸ்டு 5-ந்தேதி இந்தியாவிற்கு வந்து தஞ்சமடைந்து உள்ளார்.
இந்நிலையில், சித்திக் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், தனிப்பட்ட முறையில் நடந்த மறுஆய்வில், நான் மந்திரிக்கான நடைமுறையை மீறவில்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும் நான் முறைகேடாக நடந்து கொண்டேன் என்பதற்கான எந்தவித சான்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக நான் மந்திரி பதவியில் இருந்து விலகியுள்ளேன் என தெரிவித்து உள்ளார். இந்தநிலையில் அவர் பதவி விலகியது பற்றி பிரதமருக்கு விரிவான விளக்கத்துடன் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். தேசத்தின் புதுப்பொலிவு மற்றும் உருமாற்றம் ஆகியவற்றுக்காக அரசுக்கு விசுவாசத்துடன் செயல்படுவேன் என்றும் அவர் வலியுறுத்தி கூறியுள்ளார்.