2024 தேர்தல் குறித்து தவறான கருத்து... மன்னிப்பு கேட்டது 'மெட்டா' நிறுவனம்!
Dinamaalai January 16, 2025 04:48 PM

கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக ‘மெட்டா’ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. 


‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை நடத்தி வரும் ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் அளித்திருந்த ஒரு பேட்டியில், ‘‘கொரோனாவுக்கு பிறகு 2024ம் ஆண்டு இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் ஆளுங்கட்சிகள் தோல்வி அடைந்தன’’ என்று கூறியிருந்தார்.

அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி 3வது தடவையாக ஆட்சியை பிடித்தார் என்றும், எனவே, மார்க் ஜுக்கர்பெர்க் கூறியது தவறான கருத்து என்றும் அவர் கூறினார்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே, ‘‘மெட்டா நிறுவனத்தை எனது தலைமையிலான நிலைக்குழு விசாரணைக்கு அழைக்கும்’’ என்று கூறினார். இதற்கிடையே, ‘மெட்டா’ நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் சிவநாத் துக்ரால், மார்க் ஜுக்கர்பெர்க் கருத்துக்காக மன்னிப்பு கோரினார்.

அவர் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில், “2024ம் ஆண்டு தேர்தல்களில் பெரும்பாலான ஆளுங்கட்சிகள் தோல்வி அடைந்ததாக மார்க் கூறியது, பல்வேறு நாடுகளை பொறுத்தவரை சரியானதுதான். ஆனால் இந்தியாவுக்கு பொருந்தாது. கவனக்குறைவால் ஏற்பட்ட இத்தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்தியா தொடர்ந்து எங்களது முக்கியமான நாடாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் நிஷிகாந்த் துபே, மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். 

இது குறித்து பேசிய அவர், “ ‘மெட்டா’ நிறுவன அதிகாரி இறுதியாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது, இந்தியாவின் சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி. இனி, இப்பிரச்சினையில் நிலைக்குழுவுக்கு வேலை இல்லை. இதை முடிந்துபோன பிரச்சினையாக கருதுகிறோம்” என்றார்.

!

 .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.