இஸ்ரோ பெருமிதம்... 2 செயற்கைகோள்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி!
Dinamaalai January 16, 2025 07:48 PM

 
இஸ்ரோ விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதற்காக  இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்து அவற்றிற்கு  'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என பெயரிட்டுள்ளது.  தலா 220 கிலோ எடை கொண்ட இதனை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் செலுத்தி, விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களையும் இணைய வைக்கும் கடுமையான பரிசோதனையில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.  இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், 2 செயற்கைக்கோள்களை சுமந்தபடி  டிசம்பர் 30ம் தேதி விண்ணில் பாய்ந்தது.

திட்டமிட்டபடி ராக்கெட்டின் இரு பாகங்கள் அடுத்தடுத்து பிரிந்தன. ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோள் 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. இதன்படி இரு செயற்கைக்கோள்கள் இடையேயான தூரம் 230 மீட்டர் தூரத்தில் இருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டு, பின்னர் 3 மீட்டராக குறைக்கப்பட்டது. தீவிர ஆய்வுக்கு பிறகு இரண்டையும் இணைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்று இருப்பதாக  இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார் விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினர் விரிவான தரவுகளை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். தரவுகள் சரிபார்ப்பு நிறைவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

!

 .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.