நடிகர் அஜித் : இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி. நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென்று பின் வாங்கியது.
நடிகர் அஜித் கடைசியாக துணிவு என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி 2 ஆண்டுகளான நிலையில் அவரின் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி: துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை காரணமாக படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆனதாக கூறப்பட்டு வந்தது. ஒரு வழியாக இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்து இருக்கின்றது.
இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகளையும் முடித்து கொடுத்திருக்கின்றார் நடிகர் அஜித். தற்போது துபாயில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டு 3வது பரிசை பெற்றார்.
இதனையடுத்து ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேஸில் பங்குபெற இருப்பதாக கூறப்படுகின்றது. நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் செய்தியை மட்டும் இன்னும் படக்குழுவினர் வெளியிடாமல் இருந்து வருகிறார்கள். இன்று மாலை 6:40 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா விமர்சகர்கள் கருத்துப்படி இந்த திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி அல்லது பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அஜித்தின் பிப்ரவரி ரிலீஸ் படங்கள்: அப்படி பிப்ரவரி மாதம் படம் ரிலீஸ் ஆனால் இதற்கு முன்பு அஜித்தின் என்னென்ன படங்கள் பிப்ரவரி மாதம் வெளியாகியிருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வோம். இயக்குனர் துரை இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான முகவரி திரைப்படம் 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ஜி திரைப்படம் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.
இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான அசல் திரைப்படம் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.
இந்த திரைப்படங்களில் முகவரி திரைப்படத்தை தவிர ஜி, அசல், என்னை அறிந்தால், வலிமை இந்த நான்கு திரைப்படங்களும் சுமாரான வெற்றி படமாகவே அமைந்திருந்தது. அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் ஜனவரி மாதமே படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறி வருகிறார்கள்.