கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பழைய புதூர் நகரில் வசித்து வந்தவர் விவசாயி வேலுமணி (74). இவர் தனது தோட்டத்தில் உள்ள கதவை பூட்டுவதற்காக நேற்று இரவு சென்றுள்ளார். இந்நிலையில் தோட்டத்தின் முன்புற கேட்டினை பூட்டிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ஒற்றை யானை உணவு தேடி வந்துள்ளது. திடீரென கதவை பூட்டிக் கொண்டிருந்த வேலுமணியை தாக்கியுள்ளது. இதனால் வேலுமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் வேலுமணியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் கூட்டமாகவும், தனித்தனியாகவும் உணவு தேடி ஊருக்குள் வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காட்டு யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.