Road Accident: ``தவறாக சாலை அமைப்பவர்களை கைது செய்ய வேண்டும்'' -நிதின் கட்கரி சொல்வதென்ன?
Vikatan January 17, 2025 04:48 PM

'குண்டு குழியுமான ரோடுகளை அமைப்பது 'பிணையில்லாத குற்றமாக' கொண்டு வர வேண்டும்' என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, "உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

சாலைகளை தவறாக (குண்டும் குழியுமாக) அமைப்பது 'பிணையில்லாத குற்றமாக' மாற்றப்பட வேண்டும். சாலைகளில் எதாவது விபத்து ஏற்பட்டால், அந்தச் சாலையை அமைத்த கான்ட்ரேக்டர், இன்ஜினீயர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை வரும் 2030-ம் ஆண்டுக்குள் சாலை விபத்து மரணங்களை குறைக்க வேண்டும் என்ற கொள்கையோடு செயல்படுகிறது.

Nitin Gadkari: சாலை விபத்துகளில் இந்தியா முதலிடம்!

2023-ம் ஆண்டு தரவுகளின் படி, 5 லட்ச சாலை விபத்துகளால் 1,72,000 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 1,14,000 மரணங்கள் (66.4 சதவிகிதம்) 18-ல் இருந்து 45 வயதிற்குள்ளானவர்களுக்கு நடந்துள்ளது. இந்த விபத்துகளில் 10,000 குழந்தைகள் இறந்துள்ளனர்.

மேலும், 55,000 மரணங்கள் ஹெல்மெட் போடாததாலும், 30,000 மரணங்கள் சீட் பெல்ட் போடாததாலும் நடந்துள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள தவறுகளை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ரூ.40,000 கோடி செலவிட்டு வருகிறது.

நாட்டில் உள்ள ஓட்டுநர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய, தொழிற்சாலைகளும், பிற பங்குதாரர்களும் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஃபிட்நஸ் சென்டர் அமைக்க அரசோடு கைகோர்க்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.