அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான வாரன் எட்வர்ட் பஃபெட் உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.82 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தனது நிர்வாகத்திறமையால் இத்தனை கோடிக்கு உரிமையாளராக உள்ளார். 92 வயதாகும் வாரன் பஃபெட் தனது சாம்ராஜ்யத்திற்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக யாரையும் வாரிசாக நியமிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது தனது மொத்த சொத்திற்கும் ஒரு வாரிசைத் தேர்ந்தெடுத்துள்ளார்.வாரன் பஃபெட். தனது மகன் ஹோவர் பஃபெட்டிடம் பெர்க்ஷயர் ஹாத்வேயிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். நீண்ட காலமாக யோசித்து, அதன் பிறகு தனது வாரிசாக தனது மகனையே தேர்ந்தெடுத்துள்ளார்.
வாரன் பஃபெட் தனது £8.2 டிரில்லியன் கார்ப்பரேட் சொத்தை நிர்வகிக்கும் ஒரு வாரிசைத் தேடிக் கொண்டிருந்ததால் நீண்ட நாட்கள் யோசித்து முடிவை எடுத்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.இத்தனை கோடி சாம்ராஜ்யத்தின் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஹோவர்ட் பஃபெட், "என் தந்தையிடமிருந்து தொழிலைக் கற்றுக் கொண்டேன். நான் பெர்க்ஷயரின் குழுவில் 30 ஆண்டுகளாக இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன். பல ஆண்டுகள் பயிற்சியும், கற்றலையும் சரிவர பெற்று வருகிறேன். என் தந்தையின் பெரும்பாலான பணிகளை உன்னிப்பாக கவனித்து வருவதால் இப்போது என் தந்தை வழங்கிய புதிய பதவிக்கு தயாராக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
2013ல் அவர் தேர்வு செய்யும் போது உலகம் முழுவதும் இருந்து பொருளாதார நிபுணர்கள் தங்களது விவாதங்களை முன்வைத்தனர். ஒரு ஃபண்ட் மேனேஜர் "ஹோவிக்கு வணிகம் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு போதும் அவர் பங்குகளில் முதலீடு செய்ததில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பதவிக்கு அவர் எப்படி தகுதியாக இருக்க முடியும்?" என கேட்டிருந்தார்.
அப்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாரன் பஃபெட் "ஹோவி வணிகத்தை நடத்துவது பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை தவறான தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்ததாக போர்ட் உணர்ந்தால் அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கலாம்" என வெளிப்படையாக பதில் அளித்தார். பங்குச்சந்தை முதலீடு மற்றும் செல்வத்தின் அடிப்படையில் தற்போது வாரன் பஃபெட் உலகின் 6வது பணக்காரராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.