ஆந்திரப் பிரதேசத்தில் சங்கராந்திப் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு, தாடேபள்ளிகுடம் பகுதியில் சேவல் சண்டைப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரண்டு ஜாம்பவான்களின் சேவல்கள் களத்தில் இறங்கின. ஒன்று பிரபாகரன் என்பவரின் இந்தியச் சண்டை சேவல் வகையைச் சேர்ந்த அசீல். மற்றொரு சேவல் பெரு நாட்டின் சண்டைச் சேவல் பெருவியன். இது ரத்தையா என்பவருக்கு சொந்தமானது. இந்த இரண்டுச் சேவல் உரிமையாளர்களுக்கு மத்தியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போட்டி நிலவி வருகிறது.
2022-ம் ஆண்டில் நடந்த சேவல் சண்டைப் போட்டியில் ரூ.25 லட்சம் ரத்தையாவின் பெரு சேவல் வென்றது. அதற்கு அடுத்த வருடம் ரூ.50 லட்சம் வெற்றித் தொகையாக அறிவிக்கப்பட்டு போட்டி நடந்தது. அதிலும், ரத்தையா சேவலே வென்றது. கடந்த ஆண்டு ரூ.75 லட்சம் போட்டித் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. அதிலும் ரத்தையாவே வென்றார். இந்த நிலையிதான், இந்த ஆண்டு ரூ.1 கோடி பரிசுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. தாடேபள்ளிகுடம் பகுதியில், 500 பார்வையாளர்கள் சூழ, ஒவ்வொரு சேவலாக களம் இறக்கப்பட்டது.
இரண்டு சேவல்களும் கொண்டையை சிலுப்பி, கூரிய கால்களை தரையில் பிரண்டி நின்றக் காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், மெய்சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த ஆண்டு யார் வெற்றிப்பெறப்போகிறார்கள் என்ற பதற்றம் எல்லோர் மனதிலும் இருந்தது. சேவல்கள் தங்கள் சண்டையைத் தொடங்கின. சுமார் 5.35 நிமிடங்கள் நடந்த சண்டையில், பிரபாகரன் என்பவரின் அசீல் சேவல் வென்று பரிசைத் தட்டிச் சென்றது.
அதைத் தொடர்ந்து பிரபாகரனின் ஆதரவாளரக்ள் சேவலை தோளில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடினார்கள். இது தொடர்பாக பேசிய பிரபாகரன், ``25 ஆண்டுகளாக வெற்றித் தோல்விகளைக் கடந்து சேவல்களை இனப்பெருக்கம் செய்து வருகிறேன். இது என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.