எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த ராகுல் காந்தி.. நோயாளிகளிடம் குறை கேட்டதால் பரபரப்பு..!
காங்கிரஸ் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று இரவு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு அவர் நோயாளிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் செருப்பு தைக்கும் தொழிலாளி முதல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வரை பல்வேறு தரப்பினருடன் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இந்நிலையில், ராகுல் காந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தார். இது தொடர்பாக, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்க பாதைகளை நோயாளிகள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குளிர், பசி போன்ற சிரமங்களின் மத்தியில் அவர்கள் இருக்கின்றனர். மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியிலேயே மருத்துவமனைக்கு வெளியே குளிரில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதை எதிர்க்கும் வகையில், அவரது பதிவுக்கு சமூக வலைதள பயனாளிகள் கடும் விமர்சனங்களை கமெண்ட் செய்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva