தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 9 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரும்பினர். இந்நிலையில் விடுமுறை முடிந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது வேலைக்காக சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு நேற்று முதல் திரும்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பயணத்தை மேற்கொள்வதற்கு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. ஏராளமானோர் தங்களது பயணத்தை முன்பதிவு செய்து விட்ட நிலையில் அரசு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் முழுவதும் நிரம்பி விட்டதால் பொதுமக்கள் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் டிக்கெட் விலையை உயர்த்தி உள்ளனர். இதனால் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதன்படி 18004256151, 04424749002, 04426280445, 04426281661 என்ற எண்களை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.