கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே கரிம்புழாவைச் சேர்ந்த மம்முவின் மனைவி நபீஷா(71). இவரது மகன் பஷீர் (42), மருமகள் பசீலா (36). கடந்த 2016ம் ஆண்டு வீட்டில் இருந்த தங்க நகைகளை காணவில்லை. சந்தேகத்தின் பேரில் பஷீர், பசீலா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து தம்பதியர் மன்னார்க்காட்டில் வாடகை வீட்டில் வசித்தனர்.
வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில் இருந்த தம்பதியர் 2016 ஜூன் 23ம் தேதி நோன்பு காலத்தில் நபீஷாவை கொலை செய்யும் நோக்கில் வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று நோன்பு கஞ்சியில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். இதில் நபீஷா இறந்ததையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டது போல் சடலத்த மன்னார்க்காடு அருகே ஆரியம்பாவு பகுதியில் உள்ள தோட்டத்தில் வீசிவிட்டு தப்பினர்.
சடலத்தைக் கைப்பற்றி மன்னார்க்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் பஷீர், பசீலா நபீஷாவை கொலை செய்தது தெரிய வந்தது. இக்கொலை வழக்கு விசாரணை மன்னார்க்காடு பழங்குடியினர் ஸ்பெஷல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மகன் பஷீருக்கும், மருமகள் பசீலாவிற்கும் ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோமோன் ஜோன் தீர்ப்பு கூறினார்.
!