உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பூரண கும்பமேளா ஒரு முக்கிய ஆன்மீக விழா ஆகும்.
12 பூரண கும்பமேளா முடிந்ததை ஒட்டி, இந்த ஆண்டு 144 ஆண்டுகளுக்கொரு முறை வரும் "மகா கும்பமேளா" சிறப்பாகக் கொண்டாடப்படு கிறது.
வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரிவரை நடைபெறும் இந்த "மகா கும்பமேளா" ஜனவரி 12-ஆம் தேதி விழா தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். கூடாரங்கள் தீக்கிரையாகியதாகவும், விபத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.