`மாதம் 1500 ரூபாய்' -4000 பெண்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் மகாராஷ்டிரா அரசு.. என்ன காரணம்?
Vikatan January 20, 2025 03:48 AM

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, மகாராஷ்டிரா அரசு லட்கி பெஹின் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கியது. சட்டமன்றத் தேர்தல் நேரம் என்பதால் பெண்கள் இத்திட்டத்திற்காக தாக்கல் செய்த ஆவணங்களை சரியாக பரிசீலிக்காமல் அவசர அவசரமாக பெண்களின் வங்கிக்கணக்கில் பணத்தை வரவு வைத்தனர். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு பெண்கள் கொடுத்த ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் தவறான தகவல் கொடுத்த பெண்களை இத்திட்டத்தில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதில் 2 முதல் 3 லட்சம் பெண்களின் பெயர்கள் இத்திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்தன.

இதையடுத்து, இதற்கு விளக்கம் அளித்துள்ள மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிதி தட்கரே, ''அரசு இவ்விவகாரத்தில் எந்த வித கொள்கை முடிவும் எடுக்கவில்லை. உள்ளூர் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்கள் கொடுத்த ஆவணங்கள் சரிபார்க்கப்படவில்லை. மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் கலர் ரேஷன் கார்டு உள்ளவர்களை தவிர்த்து மற்றவர்கள் இந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்கள். எனவே, அது போன்ற பெண்கள் தங்களது விண்ணப்பத்தை திரும்ப பெற்று வருகின்றனர். பெண்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தாலும் அவர்கள் இத்திட்டத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட பெண்கள் 4 ஆயிரம் பேரிடம் அவர்கள் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் பணம் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்''என்று தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் கொடுக்கும் திட்டம் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கையால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.