தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தில் குளிக்கச்சென்ற கணவன், மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பைக்கை பறித்துச் சென்ற இளம் சிறார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி பிரைன்ட்நகர் 7வது தெருவில் வசிப்பவர் கல்யாண சுந்தரம். இவரது மனைவி முத்துமாரி (33). கணவன், மனைவி இருவரும் கோரம்பள்ளம் அருகே உள்ள காலங்கரை நீர்த்தேக்கத்தில் குளிப்பதற்காக சென்றனர். காலங்கரை கரை ஓரத்தில் இருவரும் நின்று கொண்டிருந்தபோது ஒரே மோட்டார் பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கணவன் மனைவி இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ,20,000 மதிப்புள்ள செல்போன் மற்றும் அவரது மோட்டார் பைக்கையும் பறித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் தூத்துக்குடி கணேசன் காலனி சேர்ந்த ராஜ் மகன் சிவராம் (23) பிரைன்ட்நகரை சேர்ந்த மணிமகன் செல்வ பார்த்திபன் (23), 12வது தெருவைச்சேர்ந்த மாடசாமி மகன் சக்திபெருமாள் (19), முனியசாமி நகரைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (25) மற்றும் 17 வயது இளம் சிறார் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்