பரந்தூருக்கு கிளம்பினார் தவெக தலைவர் விஜய்.. காவல்துறை நிபந்தனைகள் என்னென்ன?
Webdunia Tamil January 20, 2025 06:48 PM


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூரில் போராட்டம் செய்து வரும் போராட்டக்காரர்களை சந்திக்க இருக்கும் நிலையில் சற்றுமுன் அவர் பரந்தூருக்கு கிளம்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கும் நிலையில் 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டம் செய்து வருகின்றனர்.

போராட்டம் செய்த மக்களை ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கிராம மக்களை சந்திக்க உள்ளார். சற்றுமுன் அவர் பரந்தூருக்கு கிளம்பி சென்றதாகவும் அவர் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. அந்த நிபந்தனைகள் பின்வருவன:

* பரந்தூர் பசுமை விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். மேலும், வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் உள்ள அரங்கின் கொள்ளத்தக்க அளவுக்கு மிகாமல் மட்டுமே மக்கள் பங்கேற்க வேண்டும்.

* சட்டம் ஒழுங்கு நலனைப் பேண போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

* தாங்கள் பரந்தூர் வீனஸ் வெட்டிங் ரிசார்ட்டில் கிராம மக்களை சந்திக்கும் நேரம் தாங்கள் கேட்டுக்கொண்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

* கிராம மக்களை சந்திக்கும்போது தங்களது கட்சியினரால் அல்லது ரசிகர்களால் பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.

Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.