பெண் மருத்துவர் வன்கொடுமை கொலை வழக்கு... குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு!
Dinamaalai January 20, 2025 09:48 PM

 

பெண் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் (31) கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிபர் தாஸ் தீர்ப்பு வழங்கினார். அவருக்கான தண்டனை விவரம் 20ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அதன்படி குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராயின் தாய், “என் மகளைப் போன்றவர் பெண் பயிற்சி மருத்துவர். அவருடைய தாயின் வேதனையையும் வலியையும் என்னால் உணர முடிகிறது. இந்த வழக்கில் என் மகன் குற்றவாளி என சட்டப்படி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவனுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். தூக்கு தண்டனை விதித்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. என் மகனுக்காக நான் தனியாக அழுவேன். ஆனால் தண்டனையை விதியாக ஏற்றுக் கொள்வேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.