தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,``விஜய் பரந்தூர் செல்வதால் அது தி.மு.க-வுக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்காது. அமைச்சர் தென்னரசு பரந்தூர் விமான நிலையம் எந்தளவு முக்கியம் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். விஜய் அங்குச் செல்வதால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினும், தி.மு.க-வும் கொண்டுவரும் எந்தத் திட்டமும் தொலைநோக்குடன் தான் இருக்கும் என்பதை கடந்தக் காலங்கள் நிரூபித்திருக்கிறது. அதேப் போலதான் பரந்தூர் விமான நிலையத்துக்குப் பிறகு அந்தப் பகுதி எந்தளவு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்வார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
`பிரமாண்டம் தேவையா எனக் கேட்கிறீர்கள்?’த.வெ.க -வின் பொதுச் செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ``12 - 1 மணிக்குள் தலைவர் தளபதி வருகிறார். அனைத்து விவகாரம் குறித்தும் தலைவர் விஜய் பேசுவார். கட்சித் தலைவர் மக்களைச் சந்திப்பதற்கு இவ்வளவு பிரமாண்டம் தேவையா எனக் கேட்கிறீர்கள். அப்படி ஒன்றும் இங்கு செட்அப் செய்யப்படவில்லை. இவ்வளவு கெடுபிடிகள் இருப்பதற்கு காவல்துறையைக் கேளுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தீவிரப் பாதுகாப்பு வளையத்தில் பரந்தூர்!
நேற்று மாலை வரைக்கும் காவல்துறை தரப்பில் அம்பேத்கர் திடலில் வைத்து விஜய் போராட்டக்காரர்களை சந்திக்க அனுமதி என்ற நிலையிலேயே இருந்திருக்கின்றனர்.
இரவுக்கு மேல் விஜய்யின் பாதுகாப்பு கருதி கூட்டத்தை மண்டபத்துக்குள்ளேயே நடத்திக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் விஜய் தங்களின் இடத்திற்கு வந்து தங்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும் என விரும்பியிருக்கின்றனர். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றத் தானும் தயாராக இருப்பதாக விஜய் தெரிவித்திருக்கிறார். ஆனால், காவல்துறை தரப்பில் வெளி மைதானத்தில் வைத்து நடத்த அனுமதி கொடுக்க மறுத்திருக்கின்றனர்.
பரந்தூர் - காவல்துறை சோதனைஇது சம்பந்தமான பேச்சுவார்த்தை நேற்று இரவு 1மணி வரை காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் நடந்திருக்கிறது. அதேநேரத்தில் விஜய் அம்பேத்கர் திடலுக்கு வர காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், காவல்துறை தரப்பில் பொடவூரில் உள்ள மண்டபத்தில் வைத்து மட்டுமே கூட்டத்தை நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்திருக்கின்றனர். இந்த நிலையில்தான், இன்று காலை விஜய் வரவிருக்கும் மண்டபத்தை நோக்கி த.வெ.க தொண்டர்கள் வரத்தொடங்கினர்.
சோதனையில் காவல்துறைஅவர்களை மண்டபத்துக்கு 8 கிலோ மீட்டருக்கு முன்பாகவே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். 8 கிலோ மீட்டருக்குள்ளாக மட்டும் 4 இடங்களில் காவல்துறையினர் செக்போஸ்ட் அமைத்து ஓவ்வொரு வாகனமாக பரிசோதனை செய்து அனுப்புகின்றனர். த.வெ.க-வினரின் கார்களாக இருந்தால் அப்படியே மறித்துவிடுகின்றனர். பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராட கூடிய மக்களை மண்டபத்துக்கு அழைத்து வர த.வெ.க சார்பில் 35 வேன்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த வேன்களிலும் எந்தெந்த கிராம மக்கள் எவ்வளவு பேர் செல்கின்றனர் என்பதை கணக்கெடுத்தே காவல்துறை அனுப்புகின்றனர்.
பரந்தூர் புறப்பட்டார் த.வெ.க தலைவர் விஜய்!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமையவிருக்கிறது. ஆனால், இந்த விமான நிலையம் பரந்தூரில் வேண்டாம் என 13 கிராம மக்கள் 900 நாள்களைக் கடந்தும் தொடர்ந்துப் போராடி வருகின்றனர். இந்த நிலையில், பரந்தூர் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களைச் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அனுமதிக் கேட்டிருந்தார். ஆனால், அது திறந்தவெளி மைதானம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரம் 4 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போராட்டக்காரர்களைச் சந்திக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, வீனஸ் திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.
விஜய்விஜய்யுடன் குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிகளின் அடிப்படையில், பரந்தூரில் உள்ள வீனஸ் மண்டபத்தில் காலை 11.30 - 12.30 மணி வரை மக்களை சந்திக்கிறார். மேலும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த த.வெ.க தொண்டர்கள் யாரும் வந்து மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என விஜய் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பையொட்டி, காலை 8 மணிக்கு நீலாங்கரை வீட்டிலிருந்து தவெக தலைவர் விஜய் புறப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.