90-களின் மத்தியில் ரேவதி, குஷ்பு, மீனாவிற்கு அடுத்தபடியாக அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், பிரசாந்த் ஆகியோருடன் பல ஹீரோயின்கள் நடித்தாலும் நடிகை தேவயானி குறிப்பிடத்தகுந்தவர். பெரும்பாலும் தேவயானி நடித்த அனைத்துப் படங்களுமே ஹிட் ரகங்கள் தான்.
இப்போதிருக்கும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் தேவயானியின் தீவிர ரசிகர்களாக இருந்தனர். காதல் கோட்டை, நினைத்தேன் வந்தாய், நீ வருவாய் என, மறுமலர்ச்சி, பிரண்ட்ஸ், சூர்யவம்சம், பாரதி, ஆனந்தம், அழகி போன்ற படங்கள் தேவயானியை உச்சத்தில் கொண்டு வைத்தன.
அதன்பின் சரத்குமார், மம்முட்டி, கமல்ஹாசன், என சீனியர் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம், கன்னடம் என அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்தார் தேவயானி. மிக ராசியான நடிகையாக விளங்கிய தேவயானி சின்னத்திரையிலும் கால்பதித்து கோலங்கள் சீரியலில் இன்று அபி கதாபாத்திரத்தில் பலரது மனங்களில் வாழ்கிறார்.
இப்படி வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் வெற்றி நடை போட்ட தேவயானி இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து கரம்பிடித்தார். திருமணத்திற்குப் பிறகு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி காதலுடன், திருமதி தமிழ் ஆகிய படங்களைத் தயாரிக்க, இவரது கணவர் ராஜகுமாரன் இயக்கினார். ஆனால் இரண்டு படங்களுமே சுமாராக ஓடியது.
இதனைத் தொடர்ந்து நடிப்புக்கு முழுக்குப் போட்டார் தேவயானி. குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். மேலும் பள்ளி ஆசிரியையாகவும் பணிபுரிந்தார். தற்போது கைக்குட்டை ராணி என்ற குறும்படத்தினை இயக்கியிருக்கிறார் தேவயானி. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இக்குறும்படத்திற்கு எடிட்டிங் பி.லெனின்.
இப்படி பெரும் ஜாம்பவான்களுடன் கைகோர்த்து தேவயானி இயக்கிய இப்படம் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதினைப் பெற்றது. பெற்றோரை இழந்த ஒரு குழந்தை வெளியூரில் வந்து எப்படி சிக்கல்களை எதிர்கொள்கிறது என்பதை உணர்வுப் பூர்வமாகக் காட்டியிருக்கிறது தேவயானியின் கைக்குட்டை ராணி. சுமார் 20 நிமிடங்கள் இப்படம் ஓடுகிறது.
இதுகுறித்து தேவயானி கூறும் போது, இப்படம் சிறந்த படமாக தேர்வாகி இருப்பதில் மகிழ்ச்சி. படக்குழுவினருக்கும், மூத்த கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்தினை மேலும் பல சர்வதேச பட விழாக்களில் எடுத்துச் செல்ல உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.
மக்கள் மனதில் நீங்கா நடிகையான தேவயானி தற்போது நடிப்பிலிருந்து இயக்கம் பக்கம் திரும்பியிருப்பதால் விரைவில் வெள்ளித்திரையிலும் படங்கள் இயக்க ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.