போர் நிறுத்த ஒப்பந்தம்; 90 பாலஸ்தீனியர்களை விடுவித்த இஸ்ரேல்! காசா வீதிகளில் கொண்டாட்டம்!
Webdunia Tamil January 20, 2025 06:48 PM

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில் போர்களமாக காட்சியளித்த காசா விழாக்கோலம் பூண்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில ஆண்டுகளாக கடும் போர் தொடர்ந்து வந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் காசா சீர்குலைந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அளித்த அழுத்தத்தின் பேரில் தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.

ஒப்பந்தப்படி ஹமாஸ் கடத்தி சென்ற இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட 33 பணையக் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்றும், பதிலுக்கு இஸ்ரேல் தாங்கள் பிடித்து வைத்துள்ள 1,904 பாலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் பலர் பெண்கள், சிறுவர்கள். கல் வீசியது, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ:

3 கட்டமாக கைதிகள் விடுவிக்கப்பட உள்ள நிலையில் முதல் கட்டமாக ஹமாஸ் 3 பணையக்கைதிகளை விடுவிப்பதாக அவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதை தொடர்ந்து இஸ்ரேலும் முதற்கட்டமாக 90 பாலஸ்தீனர்களை விடுதலை செய்கிறது. விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறையில் இருந்து பேருந்து மூலம் காசாவுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததால் காசா வீதிகளில் மக்கள் பாலஸ்தீன கொடியுடன் கொண்டாடி வருகின்றனர். போர் காரணமாக சொந்த நிலத்தில் இருந்து அகதிகளாக சென்றவர்களும் மீண்டும் காசா நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.