சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடியை பொறுப்பில் இருந்து அகற்றவேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்..!
Seithipunal Tamil January 21, 2025 12:48 PM

சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி, அவருக்கு வழங்கிய முனைவர் பட்டம் உள்ளிட்ட பட்டங்கள் திரும்ப பெறப்பட வேண்டும் எனவும், அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 

மிக உயர்ந்த தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குனரான காமகோடி கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும்.

இது ஐ.ஐ.டி. போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்யவும், மூடநம்பிக்கையை வளர்க்கவும் உதவும். ஐ.ஐ.டி. இயக்குனரா, ஆர். எஸ்.எஸ். பிரசாரகரா?
என வேறுபாடு தெரியாத அளவிற்கு சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது.

ஏற்கனவே காசி தமிழ் சங்கம் என்ற பெயரில் பா.ஜ.க. அரசியலுக்கான செயல்பாட்டு களமாக நிறுவனத்தை அனுமதித்தார். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இந்து மதம் அல்லாத பிற மத அடையாளம் கொண்டோர், சமூக நீதி காரணமாக இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்தோர் பாரபட்சமாக நடத்தப்பட்டனர் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை.

இயக்குனரின் வெளிப்படையான ஆர். எஸ். எஸ் ஆதரவு பிரசாரம் மேற்படி பாரபட்சத்தை அதிகரிக்கும். பிரதமர் மோடி அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கும் உரையில் விநாயகர் உருவம்தான் முதல் குளோனிங் என பேசினார். இது வலுவாக எதிர்க்கப்பட்டது. 

அவர் தற்போது கோசாலை விழாவில் உடல் உபாதைகள் மற்றும் காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு கோமியம் அற்புதமான மருந்து என உரையாற்றி இருப்பது, கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல. கோமியம் உடல் நலத்திற்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, உடனடியாக இயக்குனர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். மேலும் அவருக்கு வழங்கிய முனைவர் பட்டம் உள்ளிட்ட பட்டங்கள் திரும்ப பெறப்பட வேண்டியவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

மேலும் பா.ஜ.க. ஆட்சி, ஆய்வு நிறுவனங்களை, இதர தன்னாட்சி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். மையங்களாக மாற்றி வருகிறது என குற்றம் சாட்டியது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், காமகோடி ஆர்.எஸ்.எஸ். பிரசாரத்தை, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் அந்தஸ்தத்தை பயன்படுத்தி செய்வது, செய்வது, தமிழ்நாட்டின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது. 

எனவே சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்திட வேண்டும் என மத்திய கல்வித்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.