1921-ம் ஆண்டு முதல் நடந்துவரும் அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடின் (AIPOC) 85-வது மாநாடு பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, மாநில நாடாளுமன்ற விவகார அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி, பீகார் சட்டப்பேரவை தலைவர் நந்த் கிஷோர் யாதவ், சட்டமன்ற துணை தலைவர் நரேந்திர நாராயண் யாதவ், பீகார் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை தலைவர்கள், பீகார் மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமேலவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணை தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். அப்போது மாநாட்டில் உரையாற்றிய அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிப்பதாக பேசினார். உடனே மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறுக்கிட்டு, `ஆளுநர் குறித்து இங்குப் பேச அனுமதியில்லை. மேலும், ஆளுநர் குறித்து அப்பாவு பேசியவை பதிவாகாது' எனத் தெரிவித்திருக்கிறார். இதனால், அதிருப்தியடைந்த தமிழ்நாட்டின் சபாநாயகர் அப்பாவு, ``ஆளுநர் சட்டப்பேரவையை அவமதித்தது குறித்து இங்கு பேசாமல் வேறு எங்கு பேசுவது" எனக் கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்.