திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னபிரசாதத்தில் பக்தர்களுக்கு மசால் வடை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. திருமலையில் உள்ள மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத கூட்டத்தில் ஒரே நேரத்தில் நான்காயிரம் பக்தர்கள் உணவு அருந்தும் விதமாக உள்ள நிலையில், இங்கு பக்தர்களுக்கு வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், சட்னி, சர்க்கரை பொங்கல் ஆகியவை பிரசாதமாக பரிமாரப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்துடன் மேலும் ஒரு பிரசாதத்தை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக வெங்காயம், பூண்டு இல்லாமல் மசால் வடைகளை தயாரித்து சோதனை முறையில் 5,000 பக்தர்களுக்கு மசாலா வடைகளை இன்று வழங்கியது. மசாலா வடைகள் சுவையாக இருந்ததாக பக்தர்கள் திருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து பிப்ரவரி 4 ஆம் தேதி ரத சப்தமி அன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.